Sunday, November 27, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?


           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 

           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று நீ ஏன் எனக்கு ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)

          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?

            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
       
         ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?  நான் தான் முதலிலேயே சொல்லிட்டேன் - ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! இல்லை, இருக்கவே இருக்கு cheat செய்வது (விளையாட்டில் மட்டும்!!) முயற்சி செய்தால் முடியாததே கிடையாது! (டூத் பேஸ்ட்டை வெளியில் எடுத்து பின் உள்ளே போடுவதைத் தவிர!!) திரும்பத் திரும்ப விளையாடி ஜெயித்து விடுங்கள்!!

உண்மையில் ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?  செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) என்னைப் பொறுத்த வரையில், சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக - நிஜ பேப்பரிலோ இல்லை கணிணியிலோ -நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  கைப்பேசியையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  

பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் சரியான வழி! 

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு - சின்ன எடிட்டிங்கோடு!! மறந்து போய் திரும்பப் பதிவிட்டு விட்டேன்!! :-)  

Sunday, November 20, 2011

தாங்க்ஸ் பூனைக்குட்டி!

"கண்ணு கமல்!" அம்மா கூப்பிடுவது காதில் விழுந்தது! 'கண்ணு' அடைமொழியோடு விளித்தால், ஏதோ எனக்குப் பிடிக்காத வேலை!

"என்னம்மா!"

"தம்பிக்கு ஜுரம் ஜாஸ்தியாயிருச்சு! கொஞ்சம் டாக்டர்கிட்ட அவனைக் கூட்டிகிட்டுப் போறயா?" அம்மா கெஞ்சுவது போல் கேட்டாள். "எனக்கு காமர்ஸில் நோட்ஸ் எடுக்கணும். நீயே கூட்டிப் போயேன்மா" என்றேன்.

"கிரைண்டர்ல இட்லிக்கு மாவரைக்கப் போட்டிருக்கேன். ஓடிட்டிருக்கு.  கரண்ட் இப்பத்தானே வந்தது... தம்பியை நீ அப்படியே உன் வண்டில வைச்சு கூட்டிட்டுப் போலாம்லயா? நாளைலருந்து அவனுக்கு மிட் டர்ம் டெஸ்டு நடக்குது. இன்னிக்கு ராஜன் டாக்டர் ஒரு ஊசி போட்டுவிட்டால், ஜுரம் சரியாயிரும்; நாளைக்கு நிம்மதியா டெஸ்ட் எழுதலாம்! அப்பா ஊருக்குப் போயிருக்கும் போதா இவனுக்கு ஜுரம் வரணும்!" என்று புலம்பிய அம்மா, "நீ கிரைண்டரைப் பார்த்து நிறுத்தறியா, நான் ஆட்டோவில் தம்பிய கூட்டிப் போறேன்" என்று என்னை ஆழம் பார்த்தாள்! எனக்குப் பிடிக்காத வேலை என்று அம்மாவுக்குத் தெரியும்!!

"சரி, சரி, நானே போறேன். டேய் விமல்! என்னைய கெட்டியாப் பிடிச்சுப்பியா வண்டில?" என்று கேட்டவாறு கிளம்பினேன். போச்சு, நோட்ஸ் எடுப்பது போச்சு! +2 வில் நல்ல மார்க் வாங்கி டே காலேஜிலேயே பி.காம். சேர்ந்து என்ன புண்ணியம்! எங்கள் காலேஜில் டே காலேஜை விட ஈவினிங் காலேஜுக்குத் தான் நல்ல லெக்சரர்ஸ்! காலையில் காலேஜ் முடித்து மதியம் சி.ஏ.வுக்கான கோர்ஸ் படிக்க வேண்டும் என ஆசை! படித்து பெரிய ஆடிட்டராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நிறைய படிக்க வேண்டும்! நோட்ஸ்??.. படிக்கத் தானே ஆசைப்படுகிறேன்! நான் என்ன அடுத்த வீட்டு சுரேஷைப் போல சினிமா, ஓட்டல் என்று வீட்டை ஏமாற்றிப் போகிறேனா என்ன...அலைந்த மனதை Be calm! என்று அடக்கிக் கொண்டே, "விமல்! போகலாமா! மேல போர்வை போர்த்தி விடட்டுமா?" என்று கேட்டபடி புறப்பட்டேன்.

விமல் என்னை இறுக்கப் பிடித்தவாறு பின் சீட்டில் உட்கார, டூ வீலரைக் கிளப்பினேன். டாக்டர் ராஜனின் கிளினிக்கில் ஏகப்பட்ட கூட்டம்! வேறு எந்த டாக்டரும் ஞாயிறு மதியம் கிளினிக் திறப்பதில்லை! இரண்டு மணி நேரமாவது ஆகலாம்! விதவிதமான நோயாளிகள், அவர்களின் செயல்கள் என்று வேடிக்கை பார்த்தவாறு காத்திருந்து டாக்டரைப் பார்த்தோம். கைராசியான டாக்டர்! தம்பியை ஞாபகமாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, "ஊசி போடட்டுமா, இல்லை மாத்திரையே போதுமா?" என்று கேட்டார். அவனும், "ஊசி வேண்டாம்" என்று விட்டான்! டாக்டர் மாத்திரைகளும் சிரப்பும் எழுதி, இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார். ஊரில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி உணவுக்கான பத்திய முறைகளையும் சொன்னார்.

தம்பியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு, அடுத்திருந்த டாக்டரின் தம்பி நடத்தும் மருந்து பெட்டிக்கடை (அவ்வளவு சின்னது) சென்றேன். உள்ளேயிருந்த, வயலட் நிறத்தில் சூடிதார் அணிந்த அழகான பெண், கவுண்டரைத் தாண்டி ரோடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருந்துச் சீட்டை நீட்டினேன். "பூனைக்குட்டி அங்கே இருக்கா?" என்றாள். திரும்பிப் பார்த்த போது ஒரு பூனைக்குட்டி டாக்டரின் பைக்கின் கீழ் ஒளிந்திருந்தது!. "உங்களுக்கு வேணுமா? பிடித்துத் தரட்டுமா?" என்று கேட்டுத் திரும்பினால், அந்தப் பெண் ஸ்டூலின் மேல் நின்று கொண்டிருந்தாள். பூனைக்குட்டி, கடையின் படியேறி, கவுண்டரின் கீழ் நுழைய முயன்று கொண்டிருந்தது! "எனக்குப் பூனைக்குட்டின்னா பயம்!" என்று சொன்ன அவளைப் பார்த்து எனக்குச் சிரிப்பாக வந்தது! காட்டிக் கொள்ளாமல், "நீங்கள் அங்கிருந்து துரத்த வேண்டும். நான் துரத்தினால், உள்ளே தான் வரும்!" என்றேன்.


"கவலையில்லை! கவுண்டர் கீழ் ஓட்டையை அடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் அந்தப் பெண்! இப்போது என் சிரிப்பை அடக்க முடியவில்லை! "அப்ப ஏன் பயப்படறீங்க!" என்று கேட்டேன். இதற்குள் என் தம்பியும் வர, பூனைக்குட்டியை ஒருவழியாக அங்கிருந்து கிளப்பி விட்டோம்.

இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ என்று நினைத்த நான், "தப்பாக நினைக்கலேன்னா, உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம்!" என்று இழுக்க, "  உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக்டிவாவில் பறப்பீர்களே! உங்கள் காலேஜில் தான் நானும் பி.காம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். நான் ஈவினிங் காலேஜ்;   இன்னிக்கு என் அண்ணனுக்கு ஹெல்ப் பண்ண மருந்துக் கடைக்கு வந்தேன்.  மதியமே வந்த நான், பூனைக்குட்டிக்குப் பயந்து உள்ளேயே உட்கார்ந்திருக்கிறேன்!  அண்ணன் வந்தவுடன் கிளம்பலாம் என்றிருந்தேன்!" என்றாள்!! ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது!

"அப்படியா! எனக்கு இன்னிக்கு லக்கி டே" என்று சொன்னேன் நான், என் தம்பி முறைப்பதையும் பொருட்படுத்தாமல். எப்படியும் கேட்கத் தானே வேண்டும்; நல்லதை ஒத்திப் போடக் கூடாது! "எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? உங்கள் காமர்ஸ் நோட்ஸை எனக்குத் தந்து உதவ முடியுமா?" என்று ஆரம்பித்தேன்.

வியப்பில் விரிந்த கண்களோடு அவள், "ம், கட்டாயமாகத் தருகிறேன். நீங்கள் எனக்கு இங்கிலீஷ் நோட்ஸ் தந்தால்!! டாக்டரின் வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் என் வீடு். என் பெயர் ஸ்வேதா! நீங்கள்?" என்று கேட்டாள். "ஸ்... என்னை நான் இன்ரொடியூஸே பண்ணிக்கலையே, என் பெயர் கமலா" என்றேன் நான்.

ஒரு அழகான நட்பை உருவாக்கிக் கொடுத்த பூனைக்குட்டிக்குத் தாங்க்ஸ்!!

Sunday, November 13, 2011

ம்னாமடஅ!! (Reverse mortgage)

சமீபத்தில் ஒரு நாளிதழின் வரிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்கும் பகுதியில் ஒருவர் தாம் ஒரு சீனியர் சிட்டிசன் என்றும் பணத்தேவை காரணமாக, தாம் 20 வருடங்களாக வாழும் தம் சொந்த வீட்டை விற்றால், வருமான வரி கட்ட வேண்டுமா என்றும் கேட்டிருந்தார்.  பதிலளித்தவர் இதற்கு கேபிடல் கெயின்ஸ் என்ற வருமான வரி செலுத்த வேண்டி வரும் என்றும், அதற்குப் பதில் அவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

நம் அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இது பற்றி சொல்லியிருந்தாலும் இதைக் குறித்த தகவல்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடையவில்லை. 

முதலில் மார்ட்கேஜ் - அடமானம் என்றால் என்ன?  நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம்!! அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள்.  நாம் வட்டியும் முதலுமாக(!) திரும்பச் செலுத்துகிறோம்.

நகை அடமானம் எல்லாம் மணப்புரத்திலிருந்து கோவாபரேடிவ் பாங்க் வரை தரும் விளம்பரங்களினால் மற்றும் விளம்பரப் பலகைகளினால் தெரியும்.  இந்த மார்ட்கேஜ்களில் பல வகை இருக்கின்றன.

இம்மாதிரி அடமானம் வைக்கும் போது,   சொத்தின் மீதான நம் உரிமை, கடனை அடைக்க அடைக்க, படிப்படியாக அதிகமாகும்.  கடனை முழுமையாக அடைக்கும் போதுதான் சொத்தின் மீதான உரிமை நமக்கு முழுமையாகத் திரும்ப வரும்.  

ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது 60 வயது அதிகமானோருக்காக இந்தியாவிலும் நம் அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம்.  60 வயதுக்கு மேற்பட்டோர், அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டை வங்கிகளில் ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.  இம்முறையில், ஏற்கெனவே சொந்தமான சொத்தை அடமானம் வைத்து, பணத்தைப் பெறுகிறோம்.  அதான் ம்னாமடஅ!! (Reverse mortgage)

கணவர், மனைவி இருவர் பெயரிலும் வீடு இருந்தால், கணவர் 60 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்; மனைவி வயது 58க்கு மேலிருந்தால போதும்.  அவர்கள் சேர்ந்து ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் முக்கிய பயன் என்னவென்றால், பணத்தேவைக்காக தாம் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்க வேண்டாம். வீட்டைக் காலி செய்யவும் வேண்டாம். விதிமுறைகட்கு உட்பட்டு, தேவையான பணத்தை ஒரே முறையாகவோ, இன்ஸ்டால்மென்ட்களிலோ தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.  இந்தக் கடனை வாங்கியவர், வேண்ட் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், அதே வீட்டிலேயே தம் காலம் முடியும் வரை வாழலாம்.  ஒரு வேளை அவர் கடனை அடைக்காமல் இறந்து விட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகள் (legal heirs) கடனை வட்டியுடன் அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், வீட்டை விற்றும் கடனை அடைக்கலாம்.  கடன் போக மிகுதி வாரிசுகளுக்குப் போகும்.  கடன் கொடுக்கும் போதே, வீட்டின் மதிப்பை வைத்துத் தான் கடன் கொடுப்பார்கள் என்பதால், நிச்சயமாக கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது!! 
வருமான வரிச் சட்டத்தில் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு வரி விலக்கு உள்ளதாம் - இம்முறையில் வீட்டை வைத்து வாங்கும் பணத்துக்கு வரி கிடையாது. காபிடல் கெயின்ஸும் வராது.

ஆகவே, சொந்த வீடிருந்தும் ஆதரவில்லா முதியவர்களிடம் இந்தத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்.  பல வங்கிகளில் இந்தச் சேவை இருக்கிறது. அருகாமையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினால் நல்லது.  உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், இது வரை இல்லாவிட்டால், உங்களுக்கென்று கட்டாயமாக சொந்தமாய் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள்/ வாங்கிக் கொள்ளுங்கள்!

டிஸ்கி: மேலும் இத்திட்டத்தைப் பற்றிச் சொல்ல, வங்கிகளிலும் வருமான வரி சம்பந்தப்பட்ட துறையிலும் இருக்கும் பதிவர்களை அழைக்கிறேன்!

Tuesday, November 8, 2011

அங்கீகாரம் - சிறுகதை

"நீ நல்லவளாகவே இருக்கலாம்; புத்திசாலியா, பார்க்க லட்சணமா இருக்கலாம்! ஆனால், நீ எங்கள் வீட்டுக்குத் தேவையில்லை! எங்கள் வீட்டுப் பழக்க வழக்கமும் உங்கள் பழக்க வழக்கமும் ஒத்துப் போகாது. என் மகன் உனக்கு வேண்டாம். உன்னை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என் மாப்பிள்ளைகள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?" இது ரிதம் படத்தில் வந்த வசனம் இல்லை. தேவியைப் பார்த்து ராஜாவின் அம்மா சொன்னது. தேவியும் ராஜாவும் காதலித்தனர். தேவியின் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டனர். தேவி ராஜாவின் வீட்டிற்குச் சென்ற போது ராஜாவின் அம்மா பங்கஜம் சொன்னது தான் மேலே படித்தது!

ராஜா பிறகு எவ்வளவோ முயன்றும் அவன் அம்மாவின் மனதை மாற்ற முடியவில்லை. இப்படியே ஓரிரு வருடங்கள் கழிந்தன. கடைசியாக மணமகள் வீட்டில் 1 மாதம் கெடு கொடுத்து விட்டனர்! வேறு வழியில்லாமல், தேவி-ராஜா திருமணம், ராஜாவைத் தவிர மணமகன் தரப்பிலிருந்து ராஜாவின் தம்பி மட்டும் கலந்து கொண்டு நிறைவேறியது.  தம்பதியர் தனிக்குடித்தனம் சென்றனர்.

இரண்டு மாதம் உருண்டோடியது. ராஜா வீட்டிலிருந்து அவன் அம்மாவைத் தவிர, அவன் அப்பா உட்பட, அனைவரும் இந்தத் தம்பதியிடம் அன்பாகப் பழக ஆரம்பித்தனர். ராஜா திருமணமானதும் முதல் முதலில் அனுப்பிய காசோலையையும் திரும்ப அனுப்பிய அவன் அம்மா   பங்கஜம், அன்றொரு நாள் கூப்பிட்டு அனுப்பிய போது, ஆசையுடன் ஆசி வாங்கச் சென்றனர் இருவரும். பங்கஜத்தம்மாளோ, அங்கிருந்த ராஜாவின் சாமான்களை எடுத்துப் போகச் சொன்னதோடு, ராஜா கொடுத்து விட்ட தீபாவளிப் புடவையையும் திரும்பத் தந்தார்!! தம்பதி கண்ணீரோடு திரும்ப வந்தனர்.


இதோ, அந்தத் தம்பதிக்கு மகளும் பிறந்து விட்டாள்! லக்ஷ்மியை அப்பா வழிப் பாட்டியைத் தவிர அத்தனை சொந்தமும் கொஞ்சி மகிழ்ந்தனர். கூட்டிப் போன போதும் பாட்டி பார்க்க மறுத்து விட்டார்! ஆனாலும் சன்னலின் வழியே அவர் பார்த்ததை, இருவரும் கவனித்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென தேவியிடமிருந்து ராஜாவிற்குத் தொலைபேசி அழைப்பு - "அம்மா நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்". ராஜா உடனே வீட்டிற்குத் திரும்பினான். "ராஜா, நல்லாயிருக்கியா? பேத்தி, அப்படியே என் அம்மா ஜாடை!  லக்ஷ்மி தேவியே தான்" என்று பேசிய   பங்கஜத்தம்மாளைப் பார்த்து திகைத்தான் ராஜா. "எனக்கு லேசாக ஹார்ட் அட்டாக் வந்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். உங்களிடம் எல்லாம் சொல்ல வேண்டாமென்று நான் தான் அப்பாவைத் தடுத்தேன்! ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் ஒரு கணத்தில் போயிருக்க வேண்டிய உயிர், எதற்கு இந்த வீண் சண்டை எனத் தோன்றியது. அதான் நல்லா குணமானதும் நானே உங்களைப் பார்க்க வந்து விட்டேன்!" என்றார் அவர்.

பங்கஜம்  அதன் பின் இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போக ஆரம்பித்தார். திடீரென ராஜாவின் அப்பா உடல் நலன் சரியில்லாமல் போக, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அலைய ஆரம்பித்தனர். சிகிச்சைகள் பலனின்றி ராஜாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஒன்றும் குறைவில்லாமல ராஜாவின் வீட்டிலேயே செய்து முடித்தனர்.

ஆயிற்று, மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்து போனது -   வருஷத் திதி முடிந்த இரண்டாவது நாள் -  இன்று தேவியின் வீட்டில் எல்லா உறவினர்களும் கூடியிருந்தனர்.  வந்திருந்த உறவினர் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பங்கஜம், எல்லாரிடமும் ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அப்போது வந்த தேவி, "என்ன, எதற்குப் பணம்?" என்று கேட்க, "உன் மாமனார் இது வரை எல்லாருக்கும் கார்த்திகைப் பண்டிகைக்குப் பணம் கொடுத்தாரில்லையா, அதான் இப்போ நான் தொடர்கிறேன்" என்று பங்கஜம் பதில் சொன்னார். தேவியும் தனக்கும் அவர் ஆசிர்வாதமாகப் பணம் தருவார் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் - அவர் இவள் பக்கம் திரும்பவே இல்லை!


பக்கத்தில் இருந்த நாத்தனாரிடம் தேவி மெல்லிய குரலில், "எனக்குக் கிடையாதா?" என்று கேட்க, அவளோ, 'அம்மா, அண்ணி கேட்கறாங்க பாரு!" எனப் போட்டுக் கொடுத்து விட்டாள்! பங்கஜம் தேவியிடம், "உனக்குக் கிடையாது" என்று சொல்லி விட்டு, "இந்தா, உனக்கு இந்தப் புடவை வாங்கி வைத்திருக்கிறேன். நீ பொறுப்பாக எல்லாக் காரியத்தையும் செய்தாய். நான என் கையால் உனக்குப் புடவை வாங்கித் தரணும் என்று தோன்றியது" என்று புடவையைக் கொடுக்க, சுற்றியிருந்தவர்கள் கை தட்டினர்.   தேவி அழ ஆரம்பித்தாள்!