Friday, February 25, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி- பகுதி 2

முன் கதைச் சுருக்கம்: அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வர் கொண்ட குடும்பம்.  தேவி, குழந்தைகளிடம், சண்டை வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் - விட்டுக் கொடுத்தலில்  ஃபிஃப்டி-ஃபிஃப்டி இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். (முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்) இனி....

          மாலையானதும் குழந்தைகள் விளையாடிவிட்டு, ஹோம்வொர்க் செய்ய, தம் அறைக்குச் சென்றனர்.  ராஜா, இசையுலகில் உலவ, கணிணிக்குச் சென்றான்.  வீட்டு வேலைகளை முடித்த தேவி அயர்வுடன், திரும்பத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தாள்.  சானல் சர்ஃபிங்கில் மசாலாப் படங்களில் மாறுபட்டுத் தெரிந்த அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.  குழந்தைகள் இரவு உணவு உண்டு, மிச்ச ஹோம்வொர்க் எழுத்து வேலையை அங்கேயே முடிப்பதாகச் சொல்லி எழுத ஆரம்பித்தனர்.

          ராஜா, "குழந்தைங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டபடி சாப்பிட வர, ராஜாவும் தேவியும் சாப்பிட ஆரம்பித்தனர்.  "என்ன சினிமா பார்க்கறே?" என்று ராஜா கேட்க, தேவி, "ஏதோ மதுரை டு தேனின்னு பஸ் ரூட் போட்டு படம்; வித்தியாசமா இருக்கு" என்று ரிமோட்டில் தன் உரிமையை நிலைநாட்டினாள்!.   சாப்பிட்டு முடித்தாயிற்று.

          அப்போது திரையில் ஒரு பாட்டு ஓட ஆரம்பிக்க, தேவி, "இந்த ட்யூன் தெரிஞ்சா மாதிரி இருக்கே, ம்...." என்றவள்,  "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" என்று பாட ஆரம்பித்தாள்.  ராஜா, "இல்லை, இது 'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க'ங்கற பாட்டு, நீ சொல்ற பாட்டு இல்ல!" என்றான்!

          தேவி, "என் அப்பா பாடி நான் கேட்டிருக்கேன், நான் சொன்ன பாட்டுத் தான், M K தியாகராஜ பாகவதர் பாடினது" என்றாள்.  ராஜாவோ, "இது MGR பாட்டு, மதுரை வீரன் படம்" என்று சொல்ல, அங்கு ஒரு கருத்து வேறுபாடு - சண்டையானது.  திரையில் பாடல் முடிவுக்கு வந்தது, "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே"என்ற வரிகளோடு! தேவியின் கொண்டாட்டத்தைக் கேட்க வேண்டுமா!  ராஜாவோ தான் சொன்ன பாட்டு சரி தான் என்றும், இந்தப் பாடல் முடிந்தது வேண்டுமானால் - தேவி சொன்ன பாட்டில் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்!

          குழந்தைகள் பெற்றோரிடம் வந்து, "அம்மா, எங்களை சண்டையில் விட்டுத் தரச் சொன்னியே, இப்ப நீ விட்டுத் தாம்மா! அப்பா, நீயும் தான்ப்பா" என்று கேட்க, தேவி "விட்டுத் தரதில ஃபிஃப்டி-ஃபிஃப்டி வேணாமா?" என்று சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர, சண்டை ஒருவழியாக ஓய்ந்தது.

          தேவி அடுத்த நாள் ராஜா, குழந்தைகள் கிளம்பி அலுவலகம், பள்ளி என்று சென்றபின் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கணிணியில் வலைத் தளங்களில் தங்கள் பிரச்னைக்குரிய பாடல்கள் பற்றியத் தகவல்களைத் தேட ஆரம்பித்தாள். 

          1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் M K தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே".  இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறாக இருந்தது.

          இசை மேதை திரு G.ராமனாதன் அவர்கள் M K தியாகராஜ பாகவதரின் தீவிர அபிமானி.  அவர் இந்தப் பாடலின் இசையில் கவரப்பட்டு, தான் இசையமைத்த M G R நடித்த மதுரைவீரன்(1956-ல் வெளியானது) படத்தில் இதே ட்யூனில் "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" என்று TMSஐயும் ஜிக்கியையும் பாட வைத்தார்!

          தேவிக்குத் திகைப்பு - ஜெயித்தது யார், -  இருவரும் ஆளுக்கு ஒரு பாடல் - அவரவருக்குத் தெரிந்ததைச் சொன்னோம், இருவரும் சரி!, ஜெயிச்சதிலயும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!  ராஜாவுக்குக் கைப்பேசியில் விவரத்தைச் சொல்ல, ராஜா, "அப்போ,  நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஸ்வீட் காரம் வாங்கி வரவா, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!" என்றான்!! 

குறிப்பு: பாடல்கள் இதோ:
1. 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி'  படத்தில் இவர்களுக்குப் பிரச்னையான பாடல் 'கலகலக்கும் எங்க காலேஜ்..'(கடைசி வரிகள் சினிமாவில்):
http://www.youtube.com/watch?v=XbMMhCMfvHU&feature=related
2. "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" பாடலுக்கு:
http://www.youtube.com/watch?v=6wTGjx4lIQY
3. "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க"  பாடலுக்கு: 
http://www.musicglitz.com/player.do?SongId=4046&pagesrc=undefined&id=undefined (பாடல் மட்டும்) அல்லது
http://www.youtube.com/watch?v=VdDyCcros6g  

Wednesday, February 23, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி- சிறுகதை

முதல் பகுதி   
      அது ஒரு ஞாயிறு மதியம்.  அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வரும் மதிய உணவு முடிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  நடுவில் தொலைகாட்சிப் பெட்டியும் பேச்சுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தது.  ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயினோடு திடீர் ம்யூஸிக்கோடு வெளிநாட்டுக் காட்சிகள் வர, ஆர்த்தி "பாட்டு வரப் போகுது!" என்று தன் ஞானத்தை வெளிப்படுத்தினாள்.  ஆனந்த், " அப்பா, சானல் மாத்துங்க!" என்றான்.
            ராஜா, "ஏன்ப்பா, உன் வயசுப் பசங்க SS Music, Sun Music அது இதுன்னு தான பார்க்கறாங்க, நீ ஏன் மாத்தச் சொல்றே?" என்றவாறே டைம்ஸ் நவ்விற்கு சானலை மாற்ற, ஆர்த்தி, "அப்பா, அவன் எமினம் பாட்டெல்லாம் ஐபாடில டவுன்லோட் செய்து கேட்டுட்டுத் தான் இருக்கான்!" என்று போட்டுக் கொடுத்தாள்!  ஆனந்த சட்டென்று, "அப்பா, நம்ம சினிமால தான் மரத்தச் சுற்றி, மலையைச் சுற்றி பாட்டு வருது, நிஜ வாழ்க்கையில யாராவது டூயட் பாடுவாங்களா?" என்றான்.  தேவி உடனே, "ஆமாங்க, நாம டூயட் பாடியிருக்கோமா என்ன, அதுவும் வெளிநாட்டுக்குப் போய்?" என்றாள்!
          ராஜா, "குட்டீஸ், இசையை எந்த மொழில வேணும்னாலும் ரசிங்க, தப்பில்லை;  ஆனந்த, நம் நாட்டில் இயல், இசை, நாடகம்னு இருந்தது.  இயலும் இசையும் நாடகத்தில் கலந்தது, இந்த நாடகத்திலருந்து தான் நம் நாட்டில் சினிமா வந்தது. அதனால தான் இன்னமும் நம் சினிமால பாட்டு" என்று விளக்கினான்.  தேவி, "அவனுக்கு விளக்கம் சரி, என் கேள்விக்கென்ன பதில்?" என்று கடைசிப் பகுதியைப் பாட்டாகவே கேட்டாள்!
          ஆர்த்தி, "அம்மா, அப்பாவை ஏன் சண்டைக்கு இழுக்கறே, நாங்க ரண்டு பேரும் சண்டை போட்டா மட்டும் திட்டறே?" என்று கேட்க, "ம், இப்போ என் பெண் கேள்விக்கென்ன பதில்?" என்று சிரித்துக் கொண்டே ராஜா தேவியைக் கேட்டான்.  தேவி, "ஆர்த்திக்குட்டி, இது சண்டையில்லம்மா, சும்மா விளயாட்டு வம்பு.  ரண்டு பேர் இருந்தா கருத்து வேறுபாடு வரத்தான் வரும், சண்டை -ஆர்க்யுமென்ட் வரும்.  ஆனால், ஒருத்தரொருத்தர் கருத்தைத் தெரிந்த பிறகு, ஒருத்தர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இத நீங்க செய்யாத போது தான் நான் திட்டறேன்!" என்றாள்.
          ஆனந்த், "ஆர்த்தி எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்றாள், நானே விட்டுக் கொடுக்கணுமா?  நான் மட்டும் உங்கள் பிள்ளயில்லயா?" என்று முறையிட, தேவி, "விட்டுக் கொடுக்கறதில எப்பவும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி தான் இருக்கணும் - ரண்டு பேரும் விட்டுத் தரணும்!  ஆர்த்தி, இனி உன் அண்ணன்கிட்டயிருந்து இந்த மாதிரி புகார் வரக் கூடாது, சரியா?" என்று சொல்ல, ஆர்த்தி சரியென்று தலையாட்டினாள்.  ஆனந்த், "ஹை, அம்மா, அதனாலத் தான் எங்களுக்கு அடிக்கடி  ஃபிஃப்டி-ஃபிஃப்டி பிஸ்கெட் வாங்கித் தரயா?" என்று கேட்க, "குறும்பு!" என்று சொன்னபடி அவன் காதைத் திருகிய தேவி, "என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே" என்று தன் பங்குக்குக் 'கடி'க்க, 'ரம்பம்!" என்று சொன்னபடி எல்லாரும் சிரித்தனர்.


இந்தப் பதிவின் நீளம் கருதி, இரண்டாம் பகுதி- நிறைவுப் பகுதியை நாளை மறுதினம் வெளியிடுகிறேன் - உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.


       

Monday, February 14, 2011

சூடான ஜோக்ஸ்

ஒருவர் வீட்டில் வந்து ஒட்டிக் கொண்ட பூனையை எப்படியாவது ஒழித்துக் கட்டத் திட்டமிட்டார்.  அந்தப் பூனையை அவர் வாக்கிங் போகும் சமயம் 2 கி.மீ. தள்ளியிருந்த இடத்தில் விட்டுவிட்டார்.
அவர் வீடு திரும்பும் முன்னே அது வீட்டுக்குப் போய் விட்டது!
அடுத்த முறை டூ வீலரில் எடுத்துச் சென்று 5 கி.மீ.தள்ளியிருந்த இடத்தில் விட்டார்.  பூனை அவர் வீடு வந்த 15 நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட்டது!
 வழி தெரிவதால் தான் பூனை வீட்டுக்கு வருகிறது என்று எண்ணிய அவர், இம்முறை காரை எடுத்துக் கொண்டு கிழக்கில்   5 கி.மீ., மேற்கில் 6 கி.மீ., பிறகு தெற்கே, வடக்கே என்று திசை மாற்றி மாற்றிச் சுற்றி விட்டு, வழியில் பூனையையும் இறக்கி விட்டார். 
இதன் நடுவே அவர் கிளம்பி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்ட அவர் மனைவி அவரைக் கைப்பேசியில் அழைக்க, ஒரு மணி நேரம் வரை 'தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக' திரும்பத் திரும்ப பதில் வந்தது!  சரி, கொஞ்சம் பொறுத்துக் கூப்பிடுவோம் என்று விட்டுவிட்டார்.
அரைமணி நேரம் கழித்து மனைவியைக் கைப்பேசியில் அவரே கூப்பிட்டார்.  டென்ஷனாயிருந்த மனைவி, "ஏன் நீங்க இன்னும் வீட்டுக்கு வரலை? நீங்க கொண்டுவிட்ட பூனை வந்து அரை மணியாகிவிட்டது!" என்று கூறினார்.  கணவர். "அந்த சனியன் பிடிச்ச பூனையிடம் ஃபோனைக் கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியலை!" என்றார்!!
######################################################################
மற்றொருவர் வாரந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  6 மாதம் கழிந்த பிறகு, அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 75 பைசாக்கள் மட்டும் போட்டார்.  ஒரு வருடம் கழித்தது.  இப்போது அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 50 காசுகள் மட்டும் போட்டார்.  அடுத்த 2 வருடங்களில் இதுவும் குறைந்து அவர் பிச்சைக்காரனுக்கு 25 காசுகள் மட்டுமே போட்டார்.  இத்தனை நாள் பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) ஏன் இப்படி படிப்படியாக குறைந்த காசுகளைப் பிச்சை போடுகிறார் எனக் கேட்க, அந்த மனிதரும் ஸின்ஸியராக, 'மிஸ்டர் பெக்கர், முதலில் நான் பேச்சிலர், 1 ரூபாய் போட்டேன், பிறகு கல்யாணமாச்சு, பெண்டாட்டியையும் கவனிக்கணும், 75 காசு போட்டேன், பிறகு குழந்தை பிறந்தது, 50 காசு போட்டேன்.  இப்போ அந்தக் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கக் காசு சேமிக்க வேண்டியிருக்கு, அதனால் 25 காசு போடறேன்' என்றார்.
பிச்சைக்காரர் யோசித்தார். 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!!
###################################################################
நஸ்கி 1 : நடுவில் வருவதால் நஸ்கி!
நஸ்கி 2 : இந்த ஜோக்ஸ் சுட்டவையாதலால், சூடான ஜோக்ஸ்!! சுட்ட இடம், ஜீ தமிழ் டி.வி., ஒரு நிகழ்ச்சியில் Humour club ஐச் சேர்ந்த இருவர் பேசியதிலிருந்து
###################################################################
பேசிய ஒருவர் பட்டிமன்றப் பேச்சாளராம்.  அவர் அடுத்த நாள் வெளியூர் கிளம்ப வேண்டுமானால், முதல் நாள் இரவு தன் மனைவியிடம் தான் அடுத்த நாள் கிளம்ப வேண்டும் என்று சொல்லி விடுவாராம், காரணம் மனைவி விடியற்காலை 4 மணிக்கு இவரை எழுப்பி காஃபி கொடுத்து வழியனுப்ப வேண்டும்!  இப்படி ஒரு நாள் திருச்சிக்குக் கிளம்ப வேண்டும் என்று  மனைவியிடம் சொல்கிறார்.  மனைவியும் அவரைக் காலையில்  எழுப்பி காஃபி கொடுக்கிறார்.  அப்போது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் அங்கு அவரைச் சுற்றிச் சுற்றி வர, அதை 2 நாள் பிரியப் போகிறோமே என்று மனம் உருகி, கொஞ்சம் காஃபியை அதன் தட்டில் விடுகிறார்.  அதைக் குடிக்கச் சொல்லிக் கொஞ்சும்போது உள்ளிருந்து மனைவியின் வாய்ஸ்: 'நாய்க்கு உங்களுக்குக் கொடுத்த காஃபியை கொடுக்காதீர்கள், அதற்கு முந்தின நாள் பால் ஆகாது!'
#####################################################################
வாய் விட்டுச் சிரிப்பதால், மன அழுத்தம் குறைகிறது, நோய்கள் குறைகிறது, நோய்கள் வரும் வாய்ப்பும் குறைகிறது, இதனாலேயே ஒரு புகழ் பெற்ற cardiologistம் தங்கள் humour club ன் அங்கத்தினர் என்று சொன்ன ஒருவர், அந்தக் கார்டியாலஜிஸ்ட் சம்பாதிப்பது நேர் வழியில் இல்லை என்று அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொன்னார், - சம்பாதிப்பது எல்லாம் By-pass-லயாம்!!
#####################################################################

வாலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்!!

Thursday, February 10, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?

           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 
           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று ஏன் ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)
          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?
            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
          ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்தக் குறிப்புகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) - கணிணியில் இல்லாத சமயம் சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  அதையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் வழி!

Monday, February 7, 2011

கதம்பம் -3

புத்தக விமர்சனம்
          ஒரு புதிர்ப் போட்டியில் சரியான பதில் அளித்தமைக்காக தோழர் பிரபாகரன் எனக்கு இரு மின்-புத்தகங்களை வழங்கியிருந்த்தார்.  இவை: 1. Britannica - Remarkable People in History, 2. இளையராஜா (வரலாற்றுச் சுவடுகள்). 

           Britannica - Remarkable People in History வரலாற்றில் தடம் பதித்த மகோன்னத மனிதர்கள் பற்றிய ஒரு சிறு புத்தகம்.   நூலில் தகவல்களோடு அம்மாமனிதர்களின் படங்களும் உள்ளன.   தகவல்களை நாம் சரியாக உள்வாங்கினோமா என்று சரிபார்த்துக் கொள்ள சிறு வினா-விடையும் உண்டு.   குழந்தைகளுக்கு ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் இந்நூலில் மாமன்னர் அசோகர், மகாத்மா காந்தி போன்றவர்களோடு, ஜுலியஸ் ஸீஸர், கிளியோபாட்ரா, ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா போன்றவர்களின் வரலாறும் உள்ளது.  மொத்தத்தில் இவர்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு மேலும் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டும் வகையில் நூல் உள்ளது.

          இளையராஜா - வரலாற்றுச் சுவடுகள் - 200 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நூல்.  இது ஒரு பத்திரிகையில் வந்ததின் தொகுப்பாகத் தெரிகிறது.  1943-ல் பிறந்த ஞானதேசிகன் @ ராஜையா என்கிற ராசையா எப்படி இளையராஜாவாகி பின்னர் இசைராஜாவானார் என்ற சரித்திரம்,  பாரதிராஜாவுடனான அவர் சந்திப்பு எல்லாம் இப்புத்தகத்தில் வருகிறது.  படிப்பின் மேல் அவருக்கிருந்த ஆசை பின்னர் எப்படி இசை மேல் திரும்பியது,  8-ம் வகுப்பிற்கு  படிப்பதற்காக அவர் எப்படி வேலை பார்த்தார், நாடக மேடைகளில் அவர் அண்ணனுடன் சேர்ந்து ஆர்மோனியம் வாசித்தது, திரைப்பட வாய்ப்புகள் தேடியது, அன்லக்கி என முத்திரை குத்தப்பட்டது, வாய்ப்புகள் வந்து புகழ் வந்தது, நடுவில் சிலரின் பன்முகங்கள் என பல்சுவையோடு போகிறது நூல்.  இவருக்கு ஸ்வரம் எழுதத் தெரியாமல் இருந்து, தானே முனைந்து கற்றுக் கொண்டுள்ளார் என்பதும், புகழ் வந்த பிறகும்  ஆசிரியர்களிடம் சாஸ்த்திரீய சங்கீதம் முயன்று கற்றுள்ளார் என்பதும், தன் தவறுகளைத் தாம் ஒத்துக் கொள்கிற பெரிய மனம் படைத்தவர் என்பதும், practical jokes/pranks செய்வதில் நாட்டமுடையவர் என்பதும் எனக்கு புதிய செய்திகள்.  மொத்தத்தில் இன்டரஸ்டிங் புத்தகம்.

          இந்தப் பதிவு புத்தகங்களை அனுப்பியவருக்கு என் நன்றி அறிவிப்பு (ஸைடில் நானும் பரிசு வாங்கினேன்னு பெருமையடிச்சுக்க-ன்னு நீங்க நினைச்சீங்கன்னா நான் பொறுப்பில்லை!!)

பாலகுமாரன் - கணிணி- (ப்ளாக்) பற்றி

          அண்மையில் நான் பல்சுவை நாவல் ஒன்று கையில் கிடைக்கப் பெற்றேன். பாலகுமாரனின் கேள்வி பதில் பகுதியும் அதில் இடம் பெற்றிருந்த்தது.  அதில் அவரை ஒரு வாசகர் 'இணைய தளத்தில் நீங்கள் ஏன் பேசுவதில்லை?' எனக் கேட்டிருந்தார்.  அதற்கு அவரின் நீண்ட பதிலில் இருந்து : "எனக்கு அந்த வித்தை தெரியாது, இதுவரை கணிணியை நான் இயக்கியதில்லை.   இயக்கக் கற்றுக் கொள்ளவுமில்லை...பொறுமையாக வெகுநேரம் கணிணிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற வேதனை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.  கணிணியில் உரையாடுவதும், இணையதளத்தின் வலைப் பின்னலில் போய் கடிதங்கள் எழுதுவதும் ஒரு போதை.  ஆத்திரமூட்டுவதற்கென்று பல கிறுக்குத்தனமான மனிதர்கள் இருக்கிறார்கள்.  அந்த ஆத்திரமூட்டலில் சிக்கிக் கொண்டால் பதிலுக்கு வேகமாக ஆத்திரப்பட்டு அந்த வலைப்பின்னல் முழுவதும் நாம் நாறடிப்போம்."
          "என்னைப் பற்றி என்ன நினைகிறீர்கள் என்கிற எண்ணத்தோடு எழுத்தாளரோ, நடிகரோ, ஓவியரோ கணிணி முன்பு உட்காரும் பொழுது தான் பிரச்சினை வருகிறது.  என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள் என்று ஒதுக்கி விட்டால் இந்த வலைப் பின்னல் சண்டைகள் வராது.  என்னைப் பாராட்டியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்குள் போய் பல நேரங்களில் பெருத்த சண்டையோடு தான் அந்த வலைப் பின்னல்காரர்கள் முடிகிறார்கள்.  சிலசமயம் இந்த சண்டைகள் மிகமிக ஆபாசமாக இருக்கின்றன."........"வலைப்பின்னலில் பாராட்டை எதிர்பார்த்து போகிற மனப்பான்மை அதிகம் ஏற்படுகிறது."  இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டு "எனவே, வலையும் வேண்டாம், பின்னலும் வேண்டாம், மற்ற வேலைக்கு மனதை, புத்தியை தயார் செய்து கொள்வதே இங்கு என்னுடைய பணி" என்று தன் கருத்தையும் பதித்து முடிக்கிறார்.

          நான் வலை உலகில் இப்போது தான்  தவழத் தொடங்கியுள்ள சிறு குழந்தை.  எனக்கு பெரியவர் சொன்ன வலையுலக அபிப்ராயம் சரியெனத் தான் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு கடி ஜோக் (பதிவின் நீளம் கருதி சின்னதாக..) (எதையும் தூக்கி ஸ்கிரீனில் அடிக்குமுன்பு அது உங்கள் சொத்துன்னு ஞாபகம் வச்சுக்கோங்க!)